இயக்குனருக்கு ஆபாச மெசேஜ்-மிரட்டல்.. என்ன நடந்தது? டைரக்டர் விளக்கம்

நடிகர் விஜய் சேதுபதியை இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையான 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதையடுத்து இயக்குனர் சீனு ராமசாமிக்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்த அவர் தனக்கு உதவுமாறு கேட்டிருக்கிறார்.

மிரட்டல் வந்தது குறித்து சென்னையில் சீனு ராமசாமி பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:வாட்ஸ் அப் மூலமும், போனிலும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. சமூக வலைத் தளத்திலும் தொடர்ந்து ஆபாசமாகத் திட்டுகின்றனர். நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாகக் கூறி செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன.

முரளிதரன் படத்தில் நடிக்க வேண்டாம் என நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்டுக் கொண்டு இருந்தேன். கதைப் பிடித்ததால் அப்படத்தில் நடிக்க முன்வந்ததாகவும் அதன் பிறகே பின்னணி தெரிந்ததாகவும் விஜய் சேதுபதி கூறினார்.'நன்றி, வணக்கம் எனக் கூறிய தன் அர்த்தம் என்ன என விஜய் சேதுபதியிடம் கேட்டேன். விஜய் சேதுபதி நலன் கருதியே 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறினேன். விஜய் சேதுபதி தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுறுத்தினேன். விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்பட்டதாகக் கூறி தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. எனக்கு அரசியல் சினிமா எடுக்கத் தெரியும்; சினிமாவில் உள்ள அரசியல் தெரியாது.விரைவில் காவல் துறையில் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்க உள்ளேன்.இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்தார்.

விஜய்சேதுபதியை தென் மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி. இதனால் அவர் மீது விஜய் சேதுபதிக்கு மரியாதை உண்டு. நீர்ப்பறவை, தர்ம துரை போன்ற பல படங்களை இயக்கிய சீனு தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் என்ற படம் இயக்கி வருகிறார்.இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையான 800 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய் சேதுபதி. அப்படத்தின் அறிவிப்பு துபாயில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு போட்டியின்போது முத்தையா முரளிதரன் வெளியிட்டார். விஜய் சேதுபதியும் இதில் கலந்து கொண்டார். ஆனால் அது சர்ச்சையாக உருவெடுத்தது.

தமிழ் ஆர்வலர்கள். இயக்குனர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, கவிஞர் தாமரை உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் சேதுபதியை 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களைப்போல் கோரிக்கை விடுத்திருந்ததுடன் அவரிடம் நேரிலும் சீனு ராமசாமி விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>