அதிக சொத்துள்ள எம்.பி.க்கள் பட்டியலில் ஜெயா பச்சன்! - மதிப்பு எவ்வளவு தெரியுமா?
அதிக சொத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பக்சன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்ள 88 சதவிகித உறுப்பினர்கள், கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) இதுதொடர்பான தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், "மாநிலங்களவையில் தற்போது 229 உறுப்பினர்கள் உள்ளனர்; அவர்களில் 201 உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள். அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மகேந்திர பிரசாத் ரூ. 4 ஆயிரத்து 78 கோடியே 41 லட்சம் சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் ஜெயா பச்சன் ரூ. ஆயிரத்து 1 கோடியே 64 லட்சம் சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் பாஜக-வைச் சேர்ந்த ரவீந்திர கிஷோர் சின்ஹா ரூ. 857 கோடியே 11 லட்சம் மதிப்பிலான சொத்துகளை வைத்துள்ளார்.
கட்சிகள் வாரியாக பார்க்கையில், மத்தியில் ஆளும் பாஜக எம்.பி.க்கள் 64 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 27 கோடியே 80 லட்சமாகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 40 கோடியே 98 லட்சமாகவும் உள்ளது.
அதேபோல, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 92 கோடியே 68 லட்சமாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 12 கோடியே 22 லட்சமாகவும் உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com