மோடியைச் சொல்கிறார்.. நிதிஷ்குமார் பேச்சை கிண்டலடித்த தேஜஸ்வி.. பீகார் பிரச்சாரத்தில் அனல்..
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, முதல் கட்டத் தேர்தல் நடக்கும் 71 சட்டசபை தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, 2ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. நிதிஷ்குமார் எப்போதுமே ஜென்டில்மேன் பாலிடிக்ஸ் புரிபவர். யாரையும் தனிப்பட்ட முறையிலோ, மோசமாகவோ திட்ட மாட்டார். ஆனால், இந்த முறை அவரும் மட்டமாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். வைஷாலி மாவட்டத்தின் மஹ்நார் பகுதியில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்த போது, லாலு பிரசாத் யாதவை பெயர் குறிப்பிடாமல் சாடினார்.
அவர் பேசுகையில், ஏழெட்டு குழந்தைகளைப் பெற்ற பிறகும் ஒரு ஆண் குழந்தை வேண்டுமென்பதற்காக அடுத்தடுத்து பிள்ளை பெறுபவர், எப்படி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட முடியும்? அவர் பெண்களைத் துச்சமாக மதிப்பவர். அதனால்தான், ஆண் குழந்தைக்குக் காத்திருந்து பெற்றுக் கொண்டவர்... என்று விமர்சித்தார்.இது குறித்து, பாட்னாவில் தேஜஸ்வி யாதவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குத் தேஜஸ்வி யாதவ் பதிலளிக்கையில், நிதிஷ்குமார் எங்களைச் சொல்லவில்லை.
பிரதமர் மோடியை மறைமுகமாகச் சொல்கிறார். பிரதமர் மோடிக்கும் தான் ஐந்தாறு சகோதரர்கள், சகோதரிகள் இருக்கிறார்கள். அதனால் மோடி மீதுள்ள கோபத்தில் நிதிஷ்குமார் அப்படிப் பேசியிருப்பார். ஆனாலும், நிதிஷ்குமாரின் வசவுகளை ஆசிகளாக நான் எடுத்துக் கொள்கிறேன் என்றார்.