மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவிகித ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல்.. சென்னையில் எஸ்.எப்.ஐ. போராட்டம்..
நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், பிற மாநில மாணவர்களுக்கு அதிக அளவில் இடம் கிடைத்தது. தமிழக மாணவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, ஆண்டுக்கு 300, 400 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்த நிலை மாறி, வெறும் பத்து பேருக்கு மட்டுமே மருத்துவக் கனவு நனவாகியது.
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்குச் சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, செப்டம்பரில் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 40 நாட்களுக்கு மேலாகியும் அந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. அதைப் பரிசீலிக்க மேலும் 3, 4 வாரக் கால அவகாசம் தேவை என்று அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக உள்பட பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று காலையில் எஸ்.எப்.ஐ மாணவர் சங்கத்தினர் ராஜ்பவன் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 7.5 சதவிகித மசோதாவுக்கு உடனடியாக கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டுமென்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.