சட்டசபையில் வரலாறு காணாத ரகளை 2 அமைச்சர்கள் உட்பட 6 கம்யூனிஸ்ட் தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
கடந்த 5 வருடங்களுக்கு முன் கேரள சட்டசபையில் ஏற்பட்ட வரலாறு காணாத ரகளை தொடர்பான வழக்கில் இன்று 2 அமைச்சர்கள் உட்பட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 6 தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றனர்.கேரளாவில் கடந்த உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சராக இருந்தவர் கே.எம். மாணி. கடந்த 2005ல் மது பார்களுக்கு லைசன்ஸ் கொடுப்பதற்காகப் பல கோடி லஞ்சம் வாங்கியதாக மாணி மீது அப்போதைய எதிர்க்கட்சி வரிசையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது.
இதையடுத்து அமைச்சர் மாணி பதவி விலக கோரி கேரளா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மது பார்களுக்கு லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட புகார் தொடர்பாகக் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த 2005ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் கே.எம். மாணி தாக்கல் செய்தார். ஆனால் அமைச்சர் மாணி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கேரள சட்டசபையில் கடும் ரகளை ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அப்போதைய எம்எல்ஏக்களும், தற்போதைய அமைச்சர்களுமான ஜெயராஜன், ஜலீல் மற்றும் எம்எல்ஏக்கள் சிவன் குட்டி, அஜித், குஞ்சு முகமது, சதாசிவன் தற்போதைய சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் உள்பட கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் சட்டசபையிலிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். கம்ப்யூட்டர்களையும் சேதப்படுத்தினர். இதில் 2.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாகக் கணக்கிடப்பட்டது. சட்டசபையில் நடந்த இந்த வரலாறு காணாத ரகளை சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாகத் திருவனந்தபுரம் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கில் இருந்து பல எம்எல்ஏக்கள் விடுவிக்கப்பட்டனர். கடைசியில் தற்போது அமைச்சர்களாக உள்ள ஜெயராஜன், ஜலீல் மற்றும் அஜித், குஞ்சு முகமது, சதாசிவன் சிவன் குட்டி ஆகிய 6 பேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் 2 அமைச்சர்கள் உட்பட 6 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி அமைச்சர்கள் ஜெயராஜன் மற்றும் ஜலீல் ஆகியோர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அமைச்சர்கள் 2 பேரும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று அமைச்சர் ஜலீல் மற்றும் ஜெயராஜன் உட்பட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். பின்னர் ₹35 ஆயிரம் ஜாமீன் தொகை கட்டியதை தொடர்ந்து அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.