கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை தெருவில் வீசிய தாய்
கேரளாவில் கள்ளக்காதல் மூலம் பிறந்த குழந்தையைத் தெருவில் வீசிய தாய் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த கணவனையும் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அருகே உள்ள காஞ்சார் வெள்ளியாமற்றம் பகுதியைச் சேர்ந்தவர் அமல் குமார் (33). இவர் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபர்ணா (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் அபர்ணாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதில் அபர்ணா கர்ப்பிணி ஆனார். இந்த விவரத்தை அபர்ணா தனது கணவனிடமிருந்து மறைத்துவிட்டார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அமல் குமார் ஊர் திரும்பினார். அப்போது தான் தன்னுடைய மனைவி கள்ளக்காதலன் மூலம் கர்ப்பிணியான விவரம் அவருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அபர்ணாவுக்கு அங்குள்ள ஒரு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை வளர்க்கக் கூடாது என்று அமல் குமார் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் அமல் குமாரும், அபர்ணாவும் சேர்ந்து அப்பகுதியிலுள்ள குழந்தைகள் நல மையத்திற்கு அருகே உள்ள பகுதியில் யாருக்கும் தெரியாமல் குழந்தையை விட்டுவிட்டுச் சென்று விட்டனர்.
இதையடுத்து அந்த குழந்தையை மீட்ட குழந்தைகள் நல மையத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் குழந்தையை வீசி விட்டுச் சென்றது அமல்ராஜும், அபர்ணாவும் எனத் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.