இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 12ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது போட்டிகள் விவரம் அறிவிப்பு.
ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் 12ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது. 14 நாள் தனிமையில் இருந்த பின்னர் தான் வீரர்கள் போட்டிகளில் விளையாட உள்ளனர். நவம்பர் 27ம் தேதி சிட்னியில் முதல் ஒருநாள் போட்டியுடன் தொடர் தொடங்குகிறது.ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் ஆஸ்திரேலியாவில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி செல்ல உள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் தலா 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியாவின் 69 நாள் சுற்றுப் பயணம் குறித்த விவரங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. சிட்னி மற்றும் கான்பரா மைதானங்களில் தான் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன.
கொரோனா காரணமாக போட்டி நடைபெறும் இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 27ம் தேதி சிட்னியில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியுடன் தொடர் தொடங்குகிறது. இரண்டாவது போட்டியும் நவம்பர் 29ம் தேதி சிட்னியிலேயே நடைபெறுகிறது. டிசம்பர் 2ம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பராவில் நடைபெறுகிறது. இதன் பின்னர் 3 போட்டிகள் அடங்கிய டி20 போட்டிகள் தொடங்குகின்றன. டிசம்பர் 4ம் தேதி கான்பராவில் முதல் போட்டியும், 2 மற்றும் 3வது போட்டிகள் டிசம்பர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிட்னியிலும் நடைபெறுகிறது. அடிலெய்ட் ஓவலில் டிசம்பர் 17ம் தேதி முதல் பகல் இரவு ஆட்டத்துடன் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதன் பின்னர் மெல்பர்னில் பாக்சிங் டே டெஸ்ட் தொடங்குகிறது. சிட்னியில் ஜனவரி 7 முதல் 3வது டெஸ்ட் போட்டி தொடங்கும். ஜனவரி 15ல் காபாவில் நாலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
மெல்பர்னில் நடைபெறவுள்ள பாக்சிங் டே டெஸ்டுக்கும், சிட்னியில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கும் இடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு கோரிக்கையை ஏற்று வீரர்களுக்கு ஒரு வாரம் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 3 நாள் போட்டி நியூ சவுத் வேல்ஸில் டிசம்பர் 6 முதல் 8 வரை நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னோடியாக டிசம்பர் 11 முதல் 13 வரை சிட்னியில் இந்தியா,ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பகல் இரவு பயிற்சி ஆட்டமும் நடைபெறுகிறது