மதுரை பல்கலை தேர்வு முறைகேடுகள்: சிபிசிஐடி விசாரிக்க கோரி வழக்கு.

மதுரை எஸ்.எஸ்.. காலனியைச் சேர்ந்த லியோனல் ஆண்டனிராஜ் என்பவர் மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைதூர தேர்வு முறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சுமார் 1.25 லட்சம் மாணவர்கள் தொலைதூர கல்வி பயின்று வருகின்றனர். ஏற்கனவே தொலைதூர கல்வி தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர் விலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளன.

ஒரு சில மையங்களில் தேர்வர்கள், அவரவர் இருக்கும் இடங்களில் தேர்வு எழுத அனுமதி தந்ததோடு, விடைத்தாள்களை பல மாதங்கள் கழித்து தேர்வு மையங்களுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழக விசாரணை குழு மற்றும் சிண்டிகேட் குழுவினர் இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்க அனுமதி அளிக்கலாம் என முடிவெடுத்தனர். ஆகவே மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைதூர தேர்வு முறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளவும் அதனை நீதிமன்றம் கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு இது தொடர்பாக மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும், தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரிக்க நியமனம் செய்யபட்ட குழு என்ன பரிந்துரைகள் செய்துள்ளது என்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து, துணை வேந்தர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை வரும் நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More News >>