பலாத்கார வழக்கு விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் திருச்சூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு காரில் செல்லும்போது ஒரு கும்பலால் கடத்தி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அந்த நடிகையிடம் டிரைவராக பணிபுரிந்து வந்த சுரேஷ் குமார் என்பவர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியது பிரபல முன்னணி நடிகர் திலீப் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் திலீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

85 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் நடிகர் திலீப் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு முதலில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவா தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் இந்த வழக்கு எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை பெண் நீதிபதி தலைமையிலான தனி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும் கோரி பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஹனி வர்கீஸ் என்ற பெண் நீதிபதி தலைமையில் ஒரு தனி நீதிமன்றத்தை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதன்படி கடந்த சில மாதங்களாக இந்த தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை இன்று கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பது: என்னுடைய வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை நீதிமன்றம் மேற்கொண்டு உள்ளது. எனவே விசாரணையை உடனடியாக நிறுத்தி வைத்து வேறு நீதிமன்றத்திற்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞரும் கேட்டுக்கொண்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வழக்கு விசாரணையை விரைந்து முடித்து ஜனவரிக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More News >>