ஆதார் எண் இணைக்கும் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்கும் கெடுவை மார்ச் 31ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்களை பெறுவதற்கு வங்கி கணக்குகள், செல்போன் எண், ரேசன் கார்டு உள்பட அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. பின்னர், ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை என நீதிமன்றம் அறிவித்தது.
தொடர்ந்து, ஆவணங்களில் ஆதார் எண் இணைக்க இம்மாதம் மார்ச் 31ம் தேதி கடைசி நாள் என்று கெடு விதிக்கப்பட்டது. ஆனால், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி தனிநபர் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகளை கொண்ட அமர்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாத், “ ஆதார் எண் இணைப்பு 88 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. காலக்கெடுவை நீட்டிக்காவிட்டால் மீதமுள்ள 12 சதவீதம் பேருக்கு நலத்திட்டங்கள் கிடைக்காமல் போகும். அதனால், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்” என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதார் அடையாள எண் முகமை வழக்கறிஞர், “வங்கிகளில் 95 சதவீதம் பேரும், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து 97 சதவீதம் பேரும் ஆதார் எண் பதிவு செய்துள்ளனர். தனிப்பட்ட லாபநோகத்துடன் கூடிய காரணங்களுக்காக அரசு ஆவணங்களுடன் 12 சதவீதம் பேர் ஆதார் எண்களை இணைக்கவில்லை” என்றார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை மார்ச் 31ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது” என தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com