நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் லஞ்சம் கேட்பதில்லையாம். உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யத் தமிழகத்தின் பல இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய முறை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டு வருகின்றனர்.இது குறித்து வந்த புகார்களின் பேரில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி பலர் மீது வழக்கு நடந்து வருகிறது.
கூடுதல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காததே லஞ்சம் பெருகக் காரணம் என்று சொல்லப்படுகிறது.தமிழகத்தில் கூடுதலாக நேரடி கொள்முதல் மையங்களைத் திறக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் , புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல் கொள்முதல் நிலையம் அதிகரிப்பு குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.இந்த வழக்கு தொடர்பாகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் சுதாதேவி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது :தமிழகத்தில் தற்போது 862 நேரடி கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இவை சனி ஞாயிறுகளில் கூட செயல்படுகிறது .
மேலும் புதிதாகத் தானியங்கி மூலம் வழங்கக்கூடிய டோக்கன் முறையை அறிமுகப் படுத்தியுள்ளோம். அதன்படி விவசாயிகள் குறிப்பிட்ட நாளில் வந்து குறிப்பிட்ட நேரத்தில் நெல் கொள்முதல் மையங்களில் வழங்கலாம் .ஒவ்வொரு மூடைக்கும் முப்பது நாற்பது ரூபாய் ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்று என்பது தவறான தகவல்.
அதே நேரத்தில் குறுவை சாகுபடி நெல் கொள்முதலுக்காகச் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு , ஆயிரத்து 725 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.