கொரோனாவில் இருந்து முதியோரை பாதுகாக்கும் பிசிஜி தடுப்பூசி.. ஐ.சி.எம்.ஆர் ஆய்வில் தகவல்
கொரோனாவில் இருந்து முதியோர்களை பிசிஜி தடுப்பூசி பாதுகாக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக(ஐசிஎம்ஆர்) நிபுணர்கள் குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் இது வரை 80 லட்சத்து 40,803 பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 73 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று ஏற்பட்டால் முதியோர்கள்தான் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
அதிலும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய் பாதித்தவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டால், அது உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், காசநோய் தடுப்பூசியான பிசிஜி மருந்து, கொரோனாவில் இருந்து பாதுகாக்கப் பயன்படுவதாக ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தேசிய நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக பிசிஜி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி போடப்பட்டிருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று தெரிய வந்தது.
இதையடுத்து, ஐசிஎம்ஆர் நிபுணர்கள், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை 86 முதியோர்களுக்கு பிசிஜி தடுப்பூசி போட்டு, அவர்களைக் கண்காணித்து வந்தனர். அவர்களுக்கு ரத்தப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இதில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் பிசிஜி தடுக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. பிசிஜி தடுப்பூசி போடுவதால், சுவாசக் குழாய்களில் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது என்று ஏற்கனவே ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. தற்போது கொரோனாவுக்கும் இது பயன்படுகிறது.