வேறு ஆளை எழுத வைத்து மோசடி ஜேஇஇ தேர்வில் முதல் மாணவன், தந்தை உட்பட 5 கைது
ஜேஇஇ தேர்வில் வேறு நபரை எழுத வைத்து மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அசாம் மாநிலத்தில் இந்த தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன், அவரது தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்தியாவில் உள்ள ஐஐடிக்கள், பிரபலமான பொறியியல் கல்லூரிகள் மற்றும் என்ஐடிக்களில் இடம் கிடைக்க வேண்டுமென்றால் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கட்டாயமாகும். இதில் மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என்ற இரண்டு தேர்வுகள் உள்ளன. இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது மிகச் சிரமமான காரியமாகும். இந்த தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக 6ம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி பெறுபவர்களும் உண்டு. பிளஸ் டூவில் கணித குரூப் எடுத்துப் படிப்பவர்களுக்கு மட்டுமே இந்த தேர்வை எழுத முடியும். ஜேஇஇ தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக நாடு முழுவதும் ஏராளமான பயிற்சி மையங்களும் உள்ளன.
இவ்வருடம் கொரோனா காரணமாக ஜேஇஇ தேர்வு மிகத் தாமதமாகக் கடந்த மாதம் தான் நடத்தப்பட்டது. முதல் கட்ட தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. இதில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நிசார்க் சாதா என்பவர் முதல் இடத்தை பிடித்தார். மொத்தம் 24 மாணவர்கள் 100க்கு 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றனர். அசாம் மாநிலத்தில் முதல் மாணவராக டாக்டர் ஜோதிர்மயி தாஸ் என்பவரின் மகன் நீல் நட்சத்திர தாஸ் என்பவர் தேர்ச்சி பெற்றார். இவர் 100க்கு 99.8 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இந்நிலையில் நீல் நட்சத்திர தாஸ் தேர்வில் முறைகேடு நடத்தியதாகக் கடந்த சில தினங்களாக சமூக இணையதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து அசாமைச் சேர்ந்த மித்திர தேவ் சர்மா என்பவர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. உண்மையில் நீல் நட்சத்திர தாஸ் தேர்வு எழுதவில்லை எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் தேர்வு எழுதினார்.
நட்சத்ர தாஸ் தேர்வு மையத்திற்குச் சென்று விடைத்தாளில் பெயர் மற்றும் பதிவு எண்ணை மட்டுமே எழுதியுள்ளார். இதன் பிறகு அவர் தேர்வு மையத்தை விட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் வேறொருவர் அவருக்குப் பதிலாகத் தேர்வு எழுதினார். இந்த மோசடிக்குத் தேர்வு அறையில் இருந்த அதிகாரிகள் 3 பேர் உதவியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மாணவர் நீல் நட்சத்ர தாஸ், அவரது தந்தை டாக்டர் ஜோதிர்மயி தாஸ், மற்றும் தேர்வு மைய அதிகாரிகளான ஹமேந்திரநாத் சர்மா, பிரஞ்சன் கலிதா, ஹீருலால் பதக் ஆகிய 5 பேரை கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர்கள் 5 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுகின்றனர். இந்த மோசடி குறித்து ஜேஇஇ தேர்வுகளை நடத்தும் தேசிய டெஸ்டிங் ஏஜென்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.