ஷூட்டிங்கில் பங்கேற்ற தல.. நடிகர் கையில் பெரிய தழும்பு
விஸ்வாசம் படத்தையடுத்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் அஜீத். இப்படத்தை எச்.வினோத் டைரக்டு செய்தார். இதையடுத்து அஜீத் அடுத்து நடிக்கும் வலிமை படத்தையும் வினோத்தே டைரக்டு செய்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கு குறுக்கிட்டதால் படப்பிடிப்பு தடைப்பட்டது. கடந்த 7 மாதத்துக்கும் மேலாகப் படப்பிடிப்பு நடக்கவில்லை.
கடந்த மாதத்துக்கு முன்பே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்ட போதிலும் வலிமை படப்பிடிப்பு கொரோனா அச்சம் காரணமாக தள்ளிப்போடப்பட்டு வந்தது. ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுக் கடந்த 2 வாரத்துக்கு முன் டெல்லியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரப்பட்டது. இதுவரை படப் பிடிப்பு நடக்காத இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது.
இதையடுத்து ஐதராபாத்திலேயே படப் பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு அங்கு அரங்குகள் நிர்மாணிக்கப்பட்டன. அஜீத் படப்பிடிப்பில் பங்கேற்பாரா அல்லது அவர் இல்லாத காட்சிகள் மட்டும் படமாக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.இந்நிலையில் ஹைதராபாத்தில் நடக்கும் வலிமை ஷூட்டிங்கில் அஜித் கலந்து கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப் படங்களும் வைரலாகி வருகின்றன.அஜீத்தின் விஸ்வாசம் தோற்றமே கண்ணுக்குள் நின்றிருந்த நிலையில் தற்போது புதிய தோற்றத்தில் அஜீத் பளபளக்கிறார்.
அஜீத்தின் புதிய தோற்றத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். வலிமை அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு அவரது புகைப்படம் ஆறுதல் அளித்துள்ளது.புகைப்படத்தில் அஜீத்தின் இடதுகையில் அடிபட்ட பெரிய தழும்பு தெரிகிறது. அது வலிமை ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தால் ஏற்பட்டது. அதைக்கண்டு அதிர்ச்சி தெரிவித்த தல ரசிகர்கள் சினிமாவுக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்காதீர்கள் என்று அட்வைஸ் பகிர்ந்திருக்கின்றனர். தமிழ் புத்தாண்டு தினத்தில் வலிமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.