அகிலேஷ் யாதவை சந்தித்த 7 பகுஜன் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்.. மாயாவதி நடவடிக்கை.
அகிலேஷ் யாதவை சந்தித்த பகுஜன்சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரை மாயாவதி சஸ்பெண்ட் செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு 10 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான தேர்தல், நவம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ளது. பாஜகவுக்கு 304 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால், அந்த கட்சி 8 பேரை நிறுத்தியுள்ளது. சமாஜ்வாடிக்கு 48 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் அந்த கட்சி ஒருவரை நிறுத்தியுள்ளது. பகுஜன்சமாஜ் கட்சிக்கு 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அக்கட்சி ஒருவரை நிறுத்தி, அதற்கு போட்டியாக யாரும் இல்லாவிட்டால், எளிதாக தேர்வாகி விடலாம். போட்டி வந்து விட்டால் மற்ற சிறிய கட்சிகளின் ஆதரவை பெற்று வெற்றிக்கு முயற்சிக்கலாம்.
அதனால், பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் ராம்ஜி கவுதம் மனு தாக்கல் செய்தார். ஆனால், திடீரென வாரணாசியைச் சேர்ந்த வக்கீல் பிரகாஷ் பஜாஜ் என்பவர், சமாஜ்வாடி ஆதரவுடன் வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். இதற்கிடையே, ராம்ஜி கவுதமுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பகுஜன் சமாஜ் கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுகின்றனர். சவுத்ரி அஸ்லாம் அலி, ஹக்கீம்லால், முகமது முஸ்தபா சித்திக், அஸ்லாம் ரெய்னி, சுஷ்மா படேல், ஹர்கோவிந்த் பார்கவா, பந்தனா சிங் ஆகிய 7 எம்.எல்.ஏ.க்களும் நேற்று(அக்.28), சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார். தற்போது பகுஜன் சமாஜ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் சமாஜ்வாடி நிறுத்தியுள்ள வக்கீல் பிரகாஷ் பஜாஜ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.