லாரன்ஸ் பிறந்த நாளில் மகிழ்ச்சியும் அதிர்ச்சியும்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ். அவரது பிறந்த நாளான இன்று ரசிகர்கள் நற்பணிகள் செய்து கொண்டாடி வருகின்றனர்.லாரன்ஸுக்கு பிறந்த நாளையொட்டி நேற்று காமன் டி பி வெளியிடப்பட்டது, அதில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். ரஜினியைப் போலவே லாரன்சும் ராகவேந்திரர் பக்தர். அவரே சொந்தமாக ராகவேந்திரர் கோயில் கட்டி பராமரித்து வருகிறார்.

நடன இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஸ்டைல் நடிகராக மாறியதுடன் வெற்றிப் படங்களை அளித்து திறமையான இயக்குனர் என்பதையும் நிரூபித்தார். இதுவரை 18 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார். தவிர இயக்குனராக மாஸ், ஸ்டைல், முனி, டான், முனி 2 காஞ்சனா ரெபெல், லக்‌ஷ்மி பாம் என 9 படங்கள் டைரக்டு செய்திருக்கிறார். இதில் ரெபெல் தெலுங்கு படம், லக்‌ஷ்மி பாம் இந்தி படம் ஆகும்.

லாரன்ஸ் தமிழில் இயக்கிய காஞ்சனா படத்தை இந்தியில் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் இயக்கினார். அப்படம் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.பிறந்தநாளையொட்டி லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு செய்த உதவி மாற்றுத் திறனாளிகளுக்கு அளித்திருக்கும் மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கி உள்ளன. அடைக்கலம் கொடுத்திருப்பதுடன் பல்வேறு ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி இருக்கிறார். பெப்சி தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கில் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்துக்கு கஷ்டப்பட்ட போது அவர்களுக்குக் கோடிகளில் நிதி கொடுத்து உதவினார்.

இந்நிலையில் கலியுக கர்ணன் என்று அவரது ரசிகர்கள் அவரது புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டி உள்ளனர். லாரன்ஸ் பிறந்தநாள் அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ருத்ரன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார். ஜிவிபிரகாஷ் இசை அமைக்கிறார்.லாரன்ஸ் பிறந்த தினமான இன்று ரஜினி தனது உடல் நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை அவரது ரசிகர்களைப் போலவே லாரன்சுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி வெளியிட்ட அறிக்கையில்,என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் பரவி தீவிரமாக பரவிக் கொண்டு இருக்கிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்; என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

ரஜினி கட்சி தொடங்கியதும் அதில் இணைந்து பணியாற்ற எண்ணியிருந்தார் லாரன்ஸ். தற்போது ரஜினியின் அறிவிப்பு அவர் அரசியலுக்கு வருவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிறந்த நாளில் புதிய பட அறிவிப்பு சந்தோஷத்தையும் ரஜினியின் அறிவிப்பு அதிர்ச்சியையும் லாரன்சுக்கு அளித்திருக்கிறது.

More News >>