மீண்டும் டிசம்பர்-15 அபாயம்.... தமிழக அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்!
தமிழகத்தின் சென்னை மாநகரில் 2015 டிசம்பரில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இந்த வெள்ளம் வந்துசென்ற பிறகு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் எதாவது ஒரு நிகழ்வு சென்னையை புரட்டி போட்டு கொண்டுதான் இருக்கிறது எனலாம். இதற்கிடையே, தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஒரு சில நாட்களாக தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருந்து வருகிறது. நேற்று சென்னை மாநகரில் பெய்த கனமழையால் கிட்டத்தட்ட பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின.
இப்போது வடகிழக்கு பருவமழையின் தொடக்க காலம் தான். பருவமழையின் ஒருநாள் பெய்த மழைக்கே இந்த கதி என்றால் இன்னும் என்ன நடக்க இருக்கிறது என்பதை நினைத்து பார்க்கையில் சற்று பயமாகத் தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை எச்சரித்துள்ளார். அதில், ``வடகிழக்குப் பருவமழை தொடங்க இருக்கிறது என்பது தெரிந்தும், முதல்வர் பழனிசாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அலட்சியத்தால் ஒரு நாள் மழையை தாங்க முடியாமல் சென்னை நகரின் முக்கிய சாலைகள் எல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கே இப்படி என்றால், இன்னும் தொடரப்போகும் வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு "டிசம்பர் 2015" வெள்ள அபாயத்தைச் சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார்.