அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி பரபரப்பு அறிக்கை.. புது கட்சி தொடங்குவாரா?

ரஜினி அறிக்கை என்ற பெயரில் கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் வெளியான அறிக்கை குறித்து, அவர் விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும் டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனப் பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அவர் அறிவித்திருந்தார்.அதன்பிறகு கடந்த மார்ச் மாதம் திடீரென நிருபர்களுக்கு ஒரு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், கட்சி பதிவு பண்ணி, கொள்கைகள் அறிவித்து, மாநாடு நடத்தி இந்த தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற வேண்டாமா? நடிகர் என்ற பிரபலத்தை வைத்துக் கொண்டு 15 முதல் 20 சதவீதம் வாக்குகளைப் பெறுவதற்குத்தான் தேர்தலில் போட்டியிட வேண்டுமா? இதற்காக ரசிகர்கள் தங்கள் சொத்துக்களை விற்று பணத்தைச் செலவழிக்க வேண்டுமா? நாம் தேர்தல் களத்தில் திமுக, அதிமுக என்ற 2 மிகப் பெரிய ஜாம்பவான்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

எனவே, இந்த 54 ஆண்டுக்கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் எழுச்சி தேவை. மக்கள் எழுச்சி ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார்.தற்போது, ரஜினி வெளியிடவுள்ள அறிக்கை என்று சமூக ஊடகங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு அறிக்கை வெளியானது. அதில், தனக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தவுடன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுத்தான் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், டிசம்பருக்குள் மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் ஜனவரி 15-ம் தேதி தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை குறித்துப் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ரஜினி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றித் தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்".

இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.

More News >>