கொரோனாவில் சம்பளத்தை உயர்த்திய பிரபல நடிகை...! எப்படியெல்லாம் கணக்கு போட்றாங்க..
கொரோனா ஊரடங்கு தமிழ் திரையுலகை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்திய திரையுலகையே பொருளாதார ரீதியாக ஒரு உலுக்கு உலுக்குகிறது. 5 மாத ஊரடங்கிற்கு பின் தான் ஷூட்டிங் தொடங்க அனுமதிக்கப்பட்டது. இன்னமும் தமிழகத்தில் திரை அரங்குகள் திறக்கப்படவில்லை. இதனால் பல கோடி முடக்கம் ஏற்பட்டது. புதிய படங்கள் தயாராகி ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்கிறது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கினால் அதற்கான செலவு எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் திண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் விஜய் ஆண்டனி, சிவகார்த்திகேயன் போன்ற ஒரு சில நடிகர்கள் தங்கள் சம்பளத்தைக் குறிப்பிட்ட சதவீதம் குறைத்துக்கொள்ளச் சம்மதித்துள்ளனர்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அங்குள்ள தயாரிப்பாளர்கள் கில்டு அமைப்பு கோரிக்கை விடுத்தது. நடிகர்கள் யாரும் தங்களது சம்பளத்தை உயர்த்தக் கூடாது மாறாக 20 சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. சில நடிகர்கள் அதை ஏற்க முன்வந்த நிலையில் நடிகை ராஷ்மிகா நொந்து போய் இருக்கிறார். மகேஷ்பாவுடன் சரிலேறு நீக்கெவ்ரு படத்தில் ஜோடி சேர்ந்த ராஷ்மிகா ஒரு கோடிக்கும் அதிகம் சம்பளம் வாங்கினார். அதன்பிறகு அவர் நடித்து வெளியான மேலும் இரண்டு படங்கள் ஹிட் ஆகின. அதை வைத்து மேலும் சம்பளம் ஏற்ற எண்ணியிருந்தார். அவரது துர்திருஷ்டம் கொரோனா வந்து சம்பளம் உயர்த்தலாம் என்று எண்ணியிருந்த அவரது ஆசையில் மண்ணை போட்டுவிட்டது. ஆனாலும் அவர் வேறுவொரு டெக்னிக்கை கையாண்டிருக்கிறார்.
புதிய படத்துக்கு கால்ஷீட் வந்தால் உடனே தனது சம்பளத்தை டபுளாக உயர்த்தி சொல்கிறாராம். கில்டு கேட்டு கொண்டபடி அதில் 20 சதவீதம் கழித்து வாங்கிக் கொள்ளச் சம்மதிக்கிறார், இதன் மூலம் அவர் ஏற்கனவே வாங்கிய சம்பளத்தைவிடக் கூடுதலாகவே சம்பளம் கிடைத்துவிடுவதால் குஷியில் இருக்கிறார்.ராஷ்மிகா தமிழில் கார்த்தி நடிக்கும் சுல்தான் படம் மூலம் அறிமுகமாகிறார். அப்படம் முடிந்து திரைக்கு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.