சபரிமலை மண்டல கால பூஜை ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்குகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகளுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்குகிறது. மண்டல கால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 26 வரை நடைபெறும். கொரோனா பரவலை தொடர்ந்து கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டபோது தான் 7 மாதங்களுக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது நடை திறக்கப்பட்டிருந்த 5 நாட்களில் தினமும் 250 பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தினமும் 200 பேருக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு வந்திருந்தனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு செய்யும்போது 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் இணைக்க வேண்டும். இந்த காரணங்களால் தான் சபரிமலையில் பக்தர்கள் வருகை மிக குறைவாக இருந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மறுநாள் 16ம் தேதி முதல் டிசம்பர் 26 வரை 41 நாட்கள் மண்டல கால பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 1,000 பக்தர்களையும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் 2,000 பக்தர்களையும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மண்டல காலத்திலும் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இம்முறை முன்பதிவு செய்யும் போது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை. தரிசனத்திற்கு வரும்போது 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும். இதற்காக சபரிமலை செல்லும் வழியில் பம்பை, நிலக்கல், பத்தனம்திட்டா உள்பட பல இடங்களில் பரிசோதனைக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பம்பை மற்றும் சன்னிதானத்தில் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் சிறிய வாகனங்கள் பம்பை வரை அனுமதிக்கப்படும். பம்பையில் பக்தர்களை இறக்கிய பின்னர் வாகனம் நிலக்கல் பகுதிக்கு திருப்பி அனுப்பப்படும்.

மேலும் பம்பை நதியில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பம்பை நதிக்கரையில் குளிப்பதற்காக ஷவர்கள் அமைக்கப்படும். பத்தனம்திட்டா, எருமேலி, வடசேரிக்கரை, நிலக்கல் வழியாக மட்டுமே இவ்வருடம் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்ற அனைத்து பாதைகளும் மூடப்படும். இதேபோல பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு சுவாமி அய்யப்பன் ரோடு வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்கு குறைவான மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட யாருக்கும் அனுமதி கிடையாது. சபரிமலை வந்த பின்னர் வெளிமாநில பக்தர்கள் யாருக்காவது கொரோனா உறுதி செய்யப்பட்டால் கேரளாவிலேயே உரிய சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளாவில் சிகிச்சை பெற விருப்பம் இல்லாவிட்டால் அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்லவும் உரிய வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

More News >>