பிரான்சில் மீண்டும் கொடூரம் 3 பேர் குத்திக் கொலை.. பெண் கழுத்து அறுத்து கொலை.

பிரான்சில் கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளி ஆசிரியர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று ஒரு பெண் உள்பட 3 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இதில் பெண் கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். பிரான்சில் கடந்த சில தினங்களுக்கு முன் முகமது நபியின் கார்ட்டூனை பயன்படுத்தியதாக கூறி ஒரு பள்ளி ஆசிரியர் மாணவர்கள் முன்னிலையில் பட்டப்பகலில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளியை போலீசார் பின்னர் சுட்டுக்கொன்றனர். இது தீவிரவாத தாக்குதல் என்றும், முஸ்லிம் மதம் மோசமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கூறினார்.

பிரான்ஸ் அதிபரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான், ஜோர்டான், துருக்கி, குவைத் உள்பட முஸ்லீம் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மக்ரோனின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று துருக்கி அதிபர் ரெஜப் தையிப் கூறினார். மக்ரோன் முஸ்லிம் மதத்தை கேவலப்படுத்துகிறார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறினார். சிரியா, லிபியா உள்பட பல முஸ்லிம் நாடுகளில் பிரான்ஸ் அதிபர் மக்ரோனுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்தன. பல முஸ்லீம் நாடுகளில் பிரான்ஸ் பொருட்களுக்கு தடை விதிப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே ஆசிரியர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் பிரான்சில் முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தினருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று தெற்கு பிரான்சில் உள்ள நீஸ் என்ற நகரத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகே நடந்த தாக்குதலில் 3 பேர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இதில் ஒரு பெண் கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். இது தவிர மேலும் 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுகுறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று கொலையாளியை மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவம் நடந்தபோது சர்ச்சில் பிரார்த்தனைக்காக ஏராளமானோர் வந்திருந்தனர். இந்த சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என்று நீஸ் நகர மேயர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

More News >>