அடுத்த ஆட்சி திமுகதான்.. சசிகலா சகோதரர் பேட்டி.. எடப்பாடிக்கு திவாகரன் பாராட்டு..

தமிழகத்தில் திமுகவே அடுத்து ஆட்சி அமைக்கும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கணித்துள்ளார்.சசிகலாவின் சகோதரரும், அம்மா திராவிடர் கழகத் தலைவருமான திவாகரன், அக்கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கருப்பையா வீட்டுத் திருமணத்தில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:கொரோனா தொற்று பரவிய சமயத்தில் தமிழக அரசுக் கல்வித் துறையில் சரியாகச் செயல்படவில்லை. கல்வியாளர்களிடம் ஆலோசனை பெற்று பள்ளி, கல்லூரிகளைத் திறந்திருக்க வேண்டும்.

திமுக தலைவர் ஸ்டாலினை நான் பாராட்டிப் பேசியதில் தவறில்லை. யார் நல்லது செய்தாலும் நான் பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினேன். அதற்காக நான் திமுகவுக்குப் போவேன் என்று சொல்வது தவறு. நான் அதிமுக கரைவேட்டியை ஒருபோதும் மாற்ற மாட்டேன். ஜெயலலிதா இறந்த போது, எனது சகோதரி சசிகலாவுடன் இருந்தவர்கள் சிலர் விளையாடிய கண்ணாமூச்சி ஆட்டத்தால் அவர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

ஜெயலலிதா மறைந்த போது, சசிகலாவை முதல்வராகப் பொறுப்பேற்கச் சொன்னதே ஓ.பன்னீர்செல்வம்தான். நான்தான் அதை ஏற்கவில்லை. அதே சமயம், சசிகலாவின் முயற்சியால்தான் அதிமுக என்ற கட்சியே காப்பாற்றப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி எப்படியோ 4 ஆண்டுகளாகக் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தியுள்ளார். சசிகலாவைப் பற்றி அவர் ஒரு வார்த்தை கூட தவறாகப் பேசியதில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை முடியும் நிலையில் உள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்தான் இன்னும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்.

சமீபகாலமாக, நாட்டிலேயே தமிழர்கள்தான் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறோம். தமிழ்நாட்டில் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது. தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை வட இந்தியர்கள் அதிகமாகப் பெற்று வருகிறார்கள். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று பாஜக சொன்னது. ஆனால், பூச்சிமருந்து உள்பட விவசாயத் தேவைகளின் விலைகள்தான் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இப்போதுள்ள நிலைமையைப் பார்த்தால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குத்தான் அதிகமான வெற்றிவாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு திவாகரன் கூறினார்.

More News >>