`நடவடிக்கை கடுமையாக இருக்கும்...!- முடிவுக்கு வருகிறதா ஸ்மித், வார்னர் கிரிக்கெட் வாழ்க்கை?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை விதிகளுக்குப் புறம்பாக சேதப்படுத்தியதை அடுத்து, முதன்முறையாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், `பந்தை சேதப்படுத்திய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கை கடுமையாக இருக்கும்’ என்று கறாராக தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்கா 2-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் பந்தை விதிகளுக்குப் புறம்பாக சேதப்படுத்தியது அம்பலமானது.
இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், பேட்ஸ்மேன் பேங்க்ராஃப்ட் ஆகியோர் உடனடியாக சொந்த நாட்டுக்குத் திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சதர்லேண்டு, `ஸ்மித், வார்னர் மற்றும் பேங்க்ராஃப்ட் ஆகியோருக்கு மட்டுமே இந்த சம்பவத்தில் சம்பந்தம் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில்தான் சொந்த நாட்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் செய்த காரியத்துக்கு நடவடிக்கை கடுமையாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமே இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ள நிலையில், ஸ்மித், வார்னர் மற்றும் பேங்க்ராஃப்ட் ஆகியோருக்கு, கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து வாழ்நாள் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com