வெற்றிவேல் யாத்திரைக்கு ஒரு லட்சம் பேர் : பா.ஜ.க. திட்டம்
திருத்தணியில், அடுத்த மாதம், 6ம் தேதி வெற்றிவேல் யாத்திரை துவக்க விழாவில் ஒரு லட்சம் பேரைத் திரட்ட வேண்டும் என பா.ஜ.க., ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.முருகப்பெருமானைப் பெருமைப்படுத்தும் விதத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வெற்றிவேல் யாத்திரை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
இதன் முதல் நிகழ்ச்சி வரும் நவ.6ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் இருந்து துவக்கப்படுகிறது. , டிச.6 ம் தேதி நிறைவாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாத்திரை நிறைவு செய்யப்படுகிறது. இந்த யாத்திரை துவக்க விழாவில் ஒரு லட்சம் தொண்டர்களைத் திரட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருத்தணியில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் பா.ஜ.க., ஆட்சி அமைத்தால் தான் வளர்ச்சி பெருகும். ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்துக்களைக் காப்பாற்ற வேண்டும் என்றால் பா.ஜ.க., ஆட்சிக்கு வரவேண்டும். முருகனின் கந்தசஷ்டி கவசத்தைச் சிலர் தொடர்ந்து குறை கூறி அவதூறு செய்து வருகின்றனர் . இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வெற்றிவேல் யாத்திரை. வரும் நவம்பர் மாதம், 6ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் இருந்து சுவையில். ஆறுபடை வீடுகளிலும் வெற்றிவேல் யாத்திரை நடத்தி, டிசம்பர் மாதம், 6ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நிறைவு பெறும்.
இந்த யாத்திரை தமிழகத்தில் பெரிய அளவில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.வரும், 2021 சட்டசபைத் தேர்தலில், திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு மக்கள் விரும்பவில்லை. புதிய ஆட்சி வரவேண்டும் என விரும்புகின்றனர். ஆகையால், வரும் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க., தலைமையில் ஆட்சி அமையும் என்றார்.