பில்லி சூனியக்காரர்கள் எனக் கருதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.
ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் குன்டி பகுதியை சேர்ந்தவர் பிர்சா முண்டா (48). இவரது மனைவி சுக்ரு புர்ட்டி (43). இவர்களுக்கு தெலானி (22) மற்றும் சோம்வார் புர்ட்டி (20) என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் தெலானி திருமணமாகி அருகிலுள்ள ஒரு கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். பிர்சா முண்டா வீட்டில் தினமும் பூஜைகள் நடத்துவது வழக்கம். சிறுசிறு மந்திரவாதமும் இவர் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த ஒரு சில நாட்களிலேயே அந்த குழந்தை இறந்து விட்டது.
பிர்சா முண்டா பில்லி சூனியம் வைத்ததால் தான் அந்த குழந்தை இறந்துவிட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறினார். இதை அந்த கிராமத்தினரும் நம்பி விட்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிர்சா முண்டா மற்றும் அவரது மனைவி, மகள் ஆகிய மூன்று பேரும் திடீரென மாயமானார்கள். இந்த விவரம் மூத்த மகளுக்கு தெரியாது. இந்நிலையில் தெலானி கடந்த சில தினங்களுக்கு முன் தனது பெற்றோரை பார்ப்பதற்காக ஊருக்கு வந்தார். ஆனால் வீட்டில் யாரும் இல்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பகுதியினரிடம் கேட்டபோதும் யாரும் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் கூறினர்.
இதனால் சந்தேகமடைந்த தெலானி, தனது பெற்றோர் மற்றும் தங்கை காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு காட்டுப் பகுதியில் 3 பேரின் உடல்கள் தலை இல்லாத நிலையில் காணப்பட்டன. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று தலையில்லாத உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அந்த உடல்கள் பிர்சா முண்டா மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோருடையது என தெரியவந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் தேடியபோது சிறிது தொலைவில் 3 பேரின் தலைகளும் கிடைத்தன. இதையடுத்து உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பில்லி சூனியம் வைத்ததாக நம்பியதால் தான் 3 பேரையும் அந்த கிராமத்தினர் கழுத்தறுத்து கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்டது ஜார்கண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பும் சிலர் பில்லி சூனியம் வைத்ததாக கூறி ஜார்கண்ட் மாநிலத்தில் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.