நாகர்கோவில் டாக்டர் தற்கொலை வழக்கு மாவட்ட குற்றப் பிரிவுக்கு மாற்றம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள். இவர் தி.மு.கவில் மருத்துவர் அணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவரது மனைவி டாக்டர் சீதா நாகர்கோவிலில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூலை 12ம் தேதி பணிக்குச் சென்ற தனது மனைவி டாக்டர் சீதாவை காரில் அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது, வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி டி. எஸ். பி. பாஸ்கரன் சிவராம பெருமாளின் காரை நிறுத்தியுள்ளார். அப்போது சிவராமப் பெருமாள், டாக்டரான தனது மனைவியை அழைத்து வருவதாக ஆங்கிலத்தில் சொல்லியிருக்கிறார். அதற்கு டி. எஸ். பி. . ஆங்கிலத்தில் தான் பேசுவாயா? தமிழில் பேச மாட்டாயா ? என ஒருமையில் பேசி அவமானப்படுத்தி விட்டாராம்.
மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. பலர் முன்பு அவமானப்பட்டதால் சிவராமபெருமாள் வேதனையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் பின்னரும் டி. எஸ். பி. பாஸ்கரன், அடிக்கடி சிவராம பெருமாளை மிரட்டி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சிவராம பெருமாள் தன்னை டி. எஸ். பி. பாஸ்கரன், மிரட்டியது தான் தன் மரணத்துக்கு காரணம்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை இதுவரை சுசீந்திரம் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் சுசீந்திரம் போலீசாரிடமிருந்து வழக்கை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.