ரூ.1 கோடி அபராதம், மத்திய அரசின் புதிய சட்டம்!
நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசை தடுக்க மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை அடுத்து, உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி அரசு உத்தரவை மீறி யாராவது காற்று மாசு ஏற்படுத்தினால் இந்த சட்டத்தின் கீழ் ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்று மாசை தடுப்பதற்காக தனியாக ஒரு வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் அரசுத்துறைகள் மற்றும் மாநில பிரிதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் அறுவடை முடிந்த பிறகு காய்ந்த வைக்கோல் களை விவசாயிகள் எரிப்பதால் காற்று மாசடைந்து டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புகை மண்டலம் உருவாகி உள்ளது. இதனால் டெல்லியின் காற்று தரக்குறியீடு அபாய அளவை தாண்டியே உள்ளது. இந்த மாசுபாட்டின் அளவு 410 புள்ளிகளை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.