நடிகை பலாத்கார வழக்கு நீதிமன்றத்தில் நடிகைக்கு எதிராக நடந்த கொடுமை
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த குறுக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தன்னை சுற்றி வளைத்து முற்றுகையிட்டு மன ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகை கடந்த 3 வருடங்களுக்கு முன் திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அந்த நடிகையின் முன்னாள் டிரைவர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் சதித் திட்டம் தீட்டியதாக மலையாளத்தின் முன்னணி நடிகரான திலீப்பும் கைது செய்யப்பட்டார். இவர் இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை ஹனி வர்கீஸ் என்ற பெண் நீதிபதி தலைமையில் தனி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் இந்த வழக்கு எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், பின்னர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திலும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை ஒரு பெண் நீதிபதி தலைமையில் தனி நீதிமன்றம் அமைத்து நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணையை மூடப்பட்ட நீதிமன்றத்தில் தான் நடத்த வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு ஹனி வர்கீஸ் என்ற பெண் நீதிபதி தலைமையில் ஒரு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் தான் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றத்திற்கு எதிராக சமீபத்தில் போலீஸ் தரப்பு வழக்கறிஞர் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
அதாவது, விசாரணை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும், தனக்கு எதிராக வந்த ஒரு மொட்டைக் கடிதத்தை, தான் இல்லாத சமயத்தில் நீதிபதி வாசித்து தன்னை அவமானப்படுத்தினார் என்றும் கூறினார். இதனால் நடிகை பலாத்கார வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க விசாரணை நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகையும் விசாரணை நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்று கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு மனு தாக்கல் செய்தார். அப்போது, விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடப்பதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் இந்த மனு மீது இன்று கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அப்போது பாதிக்கப்பட்ட நடிகை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியது: மூடப்பட்ட நீதிமன்றத்தில் தான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் விசாரணை நடைபெறும் போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குள் இருக்கின்றனர். இவர்கள் பாதிக்கப்பட்ட நடிகையை சுற்றி வளைத்து முற்றுகையிட்டு மனரீதியாக மோசமான கேள்விகளை கேட்டு துன்புறுத்துகின்றனர். ஆனால் நீதிபதி அதை கண்டுகொள்வதில்லை. மேலும் இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பல மாதங்களுக்கு முன் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு மீது இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக விசாரணை நீதிமன்றம் நடந்து கொள்வதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே நீதிமன்றத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இன்று விசாரணை நடந்தபோது அரசு தரப்பு வழக்கறிஞரும் விசாரணை நீதிமன்றத்திற்கு எதிராக புகார் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் ஆவணங்களின் எந்த நகல்களையும் தங்களுக்கு தருவதில்லை என்று அவர் கூறினார். இந்த விவரங்களை ஏன் முன்பே தெரிவிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதி, அரசுத் தரப்பு வழக்கறிஞரிடமும், நடிகையின் வழக்கறிஞரிடமும் கேட்டார். அப்போது, இதுகுறித்து ஏற்கனவே விசாரணை நீதிமன்றத்தில் பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிபதி எதையும் கண்டுகொள்ளவில்லை என்று அவர்கள் கூறினர். இதையடுத்து விசாரணை நீதிமன்றத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து எழுதி ஒரு சீல் வைக்கப்பட்ட கவரில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.