படேல் சிலை பகுதியில் ஆரோக்கியவனம் மூலிகைப் பூங்கா திறப்பு.. மோடி திறந்து வைத்தார்..
குஜராத்தில் வல்லபாய் படேல் சிலை அருகே நர்மதா ஆற்றின் கரையில் ஆரோக்கியவனம் என்ற மூலிகைப் பூங்காவை பிரதமர் மோடி திறந்து வைத்தார். குஜராத்தில் கேவாடியா பகுதியில் நர்மதா ஆற்றின் கரையில் 597 அடி உயரத்திற்கு சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை ஒற்றுமையின் சின்னம் என்று அழைக்கப்படுகிறது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த சிலைப் பகுதியில் பட்டாம்பூச்சி பூங்கா, அருங்காட்சியகம் உள்பட சுற்றுலாதலங்கள் உள்ளன. மேலும், சிலையின் உட்பகுதிக்குள் லிப்ட் மூலம் மேலே சென்று நர்மதா ஆறு, மலைப்பகுதிகளை கண்டு ரசிக்கலாம். தற்போது குஜராத் வனத்துறை சார்பில் கேவாடியா பகுதியில் ஆரோக்கியவனம் என்ற பெயரில் பெரிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதில் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைத் தாவரங்களும் அதன் பயன்பாடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று காலை குஜராத்துக்கு வந்தார். அகமதாபாத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் வீட்டுக்கு சென்று அவரது உறவினர்களிடம் துக்கம் விசாரித்தார். இதன் பிறகு, பிரதமர் மோடி, கேவாடியா பகுதிக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆரோக்கியவனம் பூங்காவை திறந்து வைத்தார். பின்னர், பேட்டரி காரில் பூங்காவைச் சுற்றி வந்து மூலிகைத் தாவரங்கள் பற்றி அங்குள்ள ஊழியர்களிடம் கேட்டறிந்தார். கொரோனா தொற்று காரணமாக, கேவாடியாவில் உள்ள படேல் சிலை சுற்றுலாதலம் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்தது. கடந்த மாதம் இது மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது அங்கு சி.ஐ.எஸ்.எப். படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.