கர்நாடகாவில் முன் அனுமதியின்றி அரசு ஊழியர்கள் நடிக்க முடியாது

கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் சினிமாவிலோ, டிவியிலோ நடிக்க வேண்டுமென்றால் முன் அனுமதி பெற வேண்டும். புத்தகம் எழுத வேண்டுமென்றாலும் கூட அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதுதவிர வரதட்சணை வாங்க கூடாது என்பது உட்பட அரசு ஊழியர்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசு ஊழியர்கள் சிலர் விடுமுறை எடுத்து சினிமா மற்றும் டிவிகளில் நடித்து வருகின்றனர்.

ஆனால் இதற்கு முன் அனுமதி பெறவேண்டும். பெரும்பாலான மாநிலங்கள் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளன. ஆனால் கர்நாடக மாநிலத்தில் சினிமா மற்றும் டிவிகளில் நடிப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை கிடையாது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாகக் கர்நாடக அரசின் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ள ஒரு வரைவு அறிக்கையில் கூறியிருப்பது: அரசு ஊழியர்கள் சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடிக்க முடியாது. இதற்குச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். புத்தகம் எழுதுவதற்கும் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். மேலும் ரேடியோ மற்றும் டெலிவிஷன்களில் நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்வதற்கும் அனுமதி கிடையாது. கர்நாடக அரசுக்கு எதிராகவோ, மத்திய அரசுக்கு எதிராகவோ அல்லது அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவோ எந்த கருத்துக்களையும் கூறவோ, விமர்சிக்கவோ கூடாது.

போதை பானங்கள் உள்படப் போதைப்பொருட்களைப் பணி நேரத்திலோ, பொது இடங்களிலோ பயன்படுத்தக்கூடாது. முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டு பயணம் செல்லக்கூடாது. இது தவிர அரசு ஊழியர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வரதட்சணை கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>