சிபிஎம் தொண்டரால் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதில் மனமுடைந்து தீக்குளித்த 16 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக சிபிஎம் தொண்டரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கி அருகே நடந்துள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை பகுதியைச் சேர்ந்தவர் மனு மனோஜ் (24). சிபிஎம் தொண்டரான இவர் கட்டப்பனை பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். சிபிஎம் மின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலும் இவர் உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவியைக் காதலித்து வந்துள்ளார். இந்த மாணவி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை மனு மனோஜ் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மனு மனோஜ் அந்த சிறுமியைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சிறுமி பலமுறை போனில் அழைத்தும் அவர் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டுக் குளியலறையில் வைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த காயமடைந்த அந்த சிறுமியை முதலில் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் உடல்நிலை மோசமானதால் பின்னர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மனு மனோஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் கட்சியிலிருந்தும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.