இந்திய ராணுவத்தினரின் பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்காக புதிய செயலி அறிமுகம்
இந்திய ராணுவத்தினரின் தகவல் பரிமாற்றத்திற்காக வாட்ஸ் அப் செயலியைப் போன்றே சாய் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பான முறையில் தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.ராணுவத்தில் பணியாற்றும் அதிகாரிகள், வீரர்களின் வாட்ஸ் அப், டிவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பிற நாட்டு அரசாங்கத்தாலும் ஒரு சில சட்டவிரோத அமைப்புகளாலும் கண்காணிக்கப்படவிட்டு வருகிறது. இதன் மூலம் தகவல்கள் திருடப்படுவதாகவும் புகார்கள் வந்தன . இதனால் இந்திய ராணுவத்தினர் வாட்ஸ் அப் உள்ளிட்ட சில செயலிகளைப் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில ராணுவத்தினர் பாதுகாப்பான முறையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள புதிய செயலி ஒன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் செயலியைப் போலவே வாய்ஸ் கால், வீடியோகால் செய்ய முடியும். குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்.இந்திய ராணுவத்தினருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி முக்கிய தகவல்கள் லீக் ஆவதை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
இந்த புதிய செயலியை ராஜஸ்தானில் உள்ள சிக்னல் யூனிட்டின் கமாண்டிங் ஆபிசரான கலோனல் சாய் சங்கர் உருவாக்கியுள்ளார். பின்னர் ராணுவத்தினர் பயன்பாட்டுக்காக நிபுணர்களின் துணையுடன் மேம்படுத்தப்பட்டது. இந்த செயலியை உருவாக்கியதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலோனல் சாய் சங்கருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.