வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை... மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். வெங்காயம் அதிக அளவில் விளையும் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானாவில் கடுமையாக மழை பெய்ததால் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய வரத்து குறைந்து, விலை படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயைத் தாண்டியது. இந்த நிலையில் வெங்காய விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : வெங்காயம் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஏற்றுமதிக்குத் தடை விதித்ததுடன் . இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து , தனியார் வர்த்தகர்கள் இதுவரை 7 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளனர். நபெட் என்ற கூட்டுறவு அமைப்பும் வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. எகிப்து, ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன் மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சம்பா பருவ வெங்காயம் அடுத்த மாதம் சந்தைக்கு வந்து விடும்.இதன்மூலம் வெங்காயம் வரத்து அதிகரித்து, விலை கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

தற்போது மத்திய தொகுப்பில் உள்ள வெங்காயம் வெளிச்சந்தைக்கு அனுப்பபட்டு வருகிறது. பதுக்கலை கட்டுப்படுத்தும் நோக்கில் வெங்காயத்தை வியாபாரிகள் இருப்பு வைக்க உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் படிப்படியாக வெங்காயத்தின் சில்லரை விலை ஒரு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது.இதே போல உருளைக்கிழங்கின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, அதையும் மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. இன்னும் ஓரிரு நாளில் பூடானில் இருந்து 30 ஆயிரம் டன் உருளைக்கிழங்கு வந்து சேரும். மேலும் 10 லட்சம் டன் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உருளைக்கிழங்கின் விலையும் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

இவ்வாறு பியூஸ் கோயல் தெரிவித்தார்.

More News >>