கூட்டை உடைத்து தப்பிய புலியால் பீதி அப்புறம் என்ன ஆச்சி?
கேரள மாநிலம் வயநாட்டில் பிடிபட்ட ஒரு புலியைத் திருவனந்தபுரத்தில் உள்ள திறந்தவெளி மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது அந்த புலி கூண்டை உடைத்துத் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த புலியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ளது சீயம்பம் கிராமம்.
இது வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் ஆகும். இதனால் இந்த கிராமத்திற்குள் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து பீதியை ஏற்படுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதிக்குள் ஒரு புலி புகுந்து அங்குள்ள ஆடு, மாடு உட்பட வளர்ப்பு பிராணிகளை அடித்துக் கொன்று வந்தது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட அஞ்சினர். இதையடுத்து அந்த புலியைப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதியினர் வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து புலியைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் ஒரு கூண்டை வைத்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்தக் கூண்டுக்குள் புலி சிக்கியது. இது குறித்து அப்பகுதியினர் வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினரும், வனத்துறை டாக்டர்களும் அங்கு விரைந்து சென்று பரிசோதனை நடத்தினர். இதில் அது பெண் புலி என்றும், அதற்கு 9 வயது இருக்கும் என்றும் தெரியவந்தது. கூண்டுக்குள் சிக்கியபோது அந்த புலிக்குக் காயங்கள் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து காயத்திற்குச் சிகிச்சை அளித்து புலியை மீண்டும் காட்டில் விடத் தீர்மானிக்கப்பட்டது.
புலிக்குச் சிகிச்சை அளிப்பதற்காக அதைத் திருவனந்தபுரம் அருகே நெய்யார் பகுதியில் உள்ள திறந்தவெளி மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. கடந்த இரு தினங்களாக அங்கு வைத்து அந்த புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மதியம் டாக்டர்கள் சென்ற போது கூண்டில் புலியை காணவில்லை. கூண்டின் மேல்பகுதியில் உள்ள கம்பிகளை வளைத்து அதன் வழியாகப் புலி தப்பிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிக்கப்பட்டது. உடனடியாக வனத்துறையினர் விரைந்து சென்று புலியை பிடிக்கும் முயற்சி ஈடுபட்டுள்ளனர். புலி தப்பி ஓடிய பகுதியிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் தான் மக்கள் வாழும் பகுதி உள்ளது. அங்கு செல்வதற்குள் அந்த புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.