பள்ளி, கல்லூரி, தியேட்டர் திறப்பு... தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு மாதம் நீட்டிப்பு!
கொரோனா ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நாளையில், நாளை முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் ஊரடங்கு நவ.30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். எனினும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ``நவ.16 முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும். அதேபோல், 10ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட திரையரங்குகளுக்கு நிபந்தனை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன்கருதி, புறநகர் மின்சார ரயில்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காக்களை 10ம் தேதி முதல் திறந்து கொள்ளலாம். 2ம் தேதி முதல் கோயம்பேட்டில் பழக்கடை மொத்த வியாபாரத்திற்கு அனுமதி. 16ம் தேதி முதல் அரசியல், சமுதாயம், மதம் தொடர்பான கூட்டங்களை 100 பேருடன் நடத்தி கொள்ளலாம்.
அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்களும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம். காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படலாம். அதேநேரம், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல இ-பதிவு முறை தொடரும். மேலும், நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள் போன்றவைக்கான தடை நீட்டிப்பு செய்யப்படுகிறது" என அறிவிக்கப்பட்டுள்ளது.