அரசு வாகனத்தில் தங்க கடத்தல்... கேரள பாஜக அதிர்ச்சி புகார்!
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக தூதரகத்தில் நிர்வாக செயலாளராக பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரிடம் இந்த மூன்று விசாரணை அமைப்புகளும் பல நாட்கள் 90 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தியும் எந்த முக்கிய ஆவணங்களும் இதுவரை கிடைக்கவில்லை.
ஆனாலும் சிவசங்கரை கைது செய்ய இந்த மூன்று மத்திய விசாரணை அமைப்புகளும் முனைப்பு காட்டி வந்த நிலையில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஸ்வப்னா சுரேஷை விசாரிக்க, அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், இந்த தங்க கடத்தல் தொடர்பாக புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன. இதை தெரிவித்திருப்பது கேரள பாஜக. கேரள பா.ஜ.க. தலைவர் கே. சுரேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கடத்தலுக்கு மாநில அரசின் பல்துறை அரசு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. விளையாட்டு கவுன்சில் தலைவரின் கார் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், கேரள கிரிக்கெட் கூட்டமைப்புடன் தொடர்புடைய பினாமி சொத்துகள் மற்றும் ஹவாலா பணபரிமாற்றங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டு உள்ளன" எனப் புகார் கூறியிருக்கிறார்.