திருவனந்தபுரம் கடத்தலில் துப்பு கொடுத்தவருக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா?
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்டது குறித்து துப்பு கொடுத்தவருக்கு சுங்க இலாகா 45 லட்சம் இனாமாக கொடுக்க தீர்மானித்துள்ளது. ஆனால் துப்பு கொடுத்தவர் குறித்த பெயர், விவரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு இந்த துணை தூதரகம் தொடங்கப்பட்டது. இந்த தூதரகத்திற்கு துபாயிலிருந்து அடிக்கடி தூதரகத்திற்கு தேவையான பொருட்கள் பார்சலில் அனுப்பப்படுவது வழக்கம். தூதரக அந்தஸ்தில் இந்த பார்சல்கள் அனுப்பப்படுவதால் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு கூட அதை திறந்து பார்க்க அனுமதி கிடையாது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் துபாயில் இருந்து இந்த தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தப்படுவதாக கேரள சுங்க இலாகா ஆணையாளருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பார்சல் விமான நிலையத்திலேயே வைக்கப்பட்டது.தூதரக அந்தஸ்தில் அனுப்பப்பட்ட பார்சல் என்பதால் அதை திறந்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உறுதியான தகவல் என்றால் அந்த பார்சலை திறந்து பார்க்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து அதைத் திறந்து பார்த்தபோது அதில் 30 கிலோ எடையுள்ள தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 13.5 கோடி ஆகும். கழிப்பறைகளுக்குப் பயன்படுத்தும் உபகரணங்கள் என்ற பெயரில் அந்த பார்சல் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்திற்கு பின்பு தான் கேரள அரசியலில் தற்போது பெரும் பரபரப்பு நிலவுகிறது. தங்கம் கடத்தல் குறித்து துப்பு கொடுப்பவருக்கு இனாம் வழங்கப்படுவது வழக்கம். சுங்க இலாகா சார்பில் இந்த இனாம் வழங்கப்படுகிறது. 1 கிலோ தங்கத்திற்கு இனாமாக ₹75,000 வழங்கப்படும். திருவனந்தபுரத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. எனவே துப்பு கொடுத்தவருக்கு அதிகபட்சமாக ₹45 லட்சம் வரை பணம் கிடைக்கும். எத்தனை கிலோ தங்கம் கிடைத்ததோ அந்த தொகைக்கான பாதிப் பணத்தை உடனடியாக கொடுத்து விடவேண்டும்.
இதன்படி திருவனந்தபுரத்தில் துப்பு கொடுத்தவருக்கு 22.50 லட்சம் பணம் கொடுக்கப்பட்டு விட்டது. வழக்கு முடிந்த பின்னர் மீதி பாதி தொகை கொடுக்கப்படும். துப்பு கொடுப்பவரின் பெயர், விபரங்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைக்கப்படும். முக்கிய அதிகாரிகளுக்கு மட்டுமே அவரது பெயர், விபரம் தெரியும். இனாமை பணமாக மட்டும் தான் கொடுக்க வேண்டும். ரகசியமான ஒரு இடத்தில் வைத்து மட்டுமே இந்த பணம் கொடுக்கப்படும்.