தொடர்ந்து சொதப்பும் கோலி! பிளே ஆஃப் வாய்ப்பை கோட்டைவிடும் பெங்களூர்!
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (31-10-2020) போட்டியில் ராயல் சாலஞ்சர் பெங்களூர் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஷார்ஜா சிறிய ஆடுகளம் என்பதால் அதிக ரன்களை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணி சொற்பரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தது. பெங்களூர் அணியின் தொடக்க இணையாக பிலிப்ஸ் மற்றும் படிக்கல் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினாலும் அவர்களால் நிலைத்து ஆட முடியவில்லை.
கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட படிக்கல் இந்த போட்டியில் 5 ரன்களிலும், பெங்களூர் கேப்டன் கோலி வழக்கம் போல் 7 ரன்னிலும் சந்தீப் ஷர்மா ஓவரில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். பவர்பிளே ஓவர் முடிவதற்குள் பெங்களூர் அணி 2 முக்கியமான விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. ஒற்றையாளாய் கடந்த சில போட்டிகளில் நின்று அணியை வெற்றிக்கு இட்டு சென்ற டிவில்லியர்ஸ், மூழ்கி கொண்டிருக்கும் இந்த போட்டியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 24 ரன்களில் அவரும் அவுட்டானார். ஒருபுறம் போராடி கொண்டிருந்த ஜோஷ் ஃபிலிப் 32 ரன்களை எடுத்திருந்த போது, ஹைதராபாத் அணியின் மாயாஜால சுழல் பந்து வீச்சாளரான ரஷித் கான் ஓவரில் அவுட்டாகி வெளியேறி அதிர்ச்சியளித்தார்.
பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மென்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் பெங்களூர் அணி இருபது ஓவர் முடிவில் 120/7 ரன்களில் சுருண்டது. ஹைதராபாத் அணி சார்பாக சந்தீப் ஷர்மா மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். பலமான பேட்டிங் வரிசையை கொண்ட ஹைதராபாத் அணிக்கு இருபது ஓவர் முடிவில் 121 ரன்களே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இவருக்கு 6.05 ரன்களே தேவைப்பட்ட நிலையில் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னரை 8 ரன்களில் அவுட்டாகி அசத்தினார் பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுந்தர். பின்னர் விக்கெட் கீப்பர் சஹாவுடன், மனீஷ் பாண்டே கைகோர்க்க இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த இணையை, பாண்டே (26) ரன்னில், சஹல் தனது சுழலில் பிரித்து பெங்களூர் அணிக்கு நம்பிக்கையை அளித்தார்.
அடுத்தடுத்து பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான உடானா மற்றும் சைனி இருவரும் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களான வில்லியம்சன்(8) மற்றும் அபிஷேக் ஷர்மா(8) விக்கெட்டை வீழ்த்த ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுது. ஆனால் மறுபுறம் நிலைத்து ஆடிய ஜேசன் ஹோல்டர் சிறப்பாக விளையாடி 26 ரன்களை சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். ஹைதராபாத் அணி 14.1 ஓவரில் 121 என்ற இலக்கை எட்டி பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது ஹைதராபாத் அணி. இரண்டு விக்கெட் மற்றும் 26 ரன்களை விளாசி வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஜேசன் ஹோல்டர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.