திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தம்
கொரானா பெற்று தளர்வுகளுக்கு பின் திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். துவக்கத்தில் 300 ரூபாய் டிக்கெட் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இலவச தரிசனம் மீண்டும் அனுமதிக்கப்பட்டது இதற்காக நாளொன்றுக்கு 6000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று பல்லாயிரக்கணக்கானோர் டோக்கன் பெற திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டோக்கன் கிடைக்காத பலர் தேவஸ்தான ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர் போலீசார் வந்து அவர்களை கலைந்து போகச் செய்தனர். டோக்கன் கிடைக்காத பக்தர்கள் கவுண்டர் முன்பு ஒரு நாளைக்கு முன்பே வரிசையில் காத்து நிற்கின்றனர். தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் பக்தர்கள் நிற்பதால், கொரோனா தொற்று பரவும் அபயம் ஏற்பட்டுள்ளது.
இதை இன்று காலை ஆய்வு செய்த தேவஸ்தான அதிகாரிகள், நாளை திங்கட்கிழமை வழங்கவேண்டிய இலவச டோக்கன்களை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, இலவச டோக்கன்களை நேரடியாக வழங்குவதா அல்லது, ஆன்லைன் மூலம் வழங்குவதா என்பது குறித்து, தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் இன்று ஆலோசித்து முடிவை அறிவிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.