சர்ச்சை ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு நெல்லை, குமரி மாவட்ட காற்றாலை நிறுவனங்களில் பினாமி பெயரில் முதலீடு.
திருவனந்தபுரத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் உள்ள காற்றாலை நிறுவனங்களில் பினாமி பெயரில் பல கோடி முதலீடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு தொடர்பு இருப்பது பல மாதங்களுக்கு முன்பே தெரியவந்தது. இதையடுத்து அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஸ்வப்னாவுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறையினர் 100 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்.
பல மாதங்களாக விசாரணை நடந்தும் சிவசங்கரை கைது செய்ய முடியாத நிலை இருந்தது. அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்காததும், ஐஏஎஸ் அதிகாரி என்ற பாதுகாப்பு இருந்தாலும் அவரை நெருங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிவசங்கருக்கு எதிராக மேலும் பல முக்கிய ஆதாரங்கள் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதையடுத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர். ஆனால் அவர் முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஒரு வார விசாரணைக்குப் பின் அந்த மனுவை கடந்த சில தினங்களுக்கு முன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிவசங்கரை கைது செய்யவும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அவரை மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தற்போது அவர் 7 நாள் காவலில் உள்ளார். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்து வருகின்றன.
சிவசங்கர் பினாமி பெயரில் கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் முதலீடு செய்துள்ளார். நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திலுள்ள காற்றாலைகளில் இவர் 100 கோடிக்கு மேல் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக வருவதற்கு முன் சிவசங்கர் கேரள மின்வாரியத்தில் தலைவராக பணிபுரிந்து வந்தார். அப்போது தான் காற்றாலை நிறுவனங்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிவசங்கர் பினாமி பெயரில் இங்கு முதலீடு செய்துள்ளார். சிவசங்கர் மட்டுமில்லாமல் திருவனந்தபுரத்திலுள்ள அமீரக துணை தூதரும் ஒரு காற்றாலை நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மத்திய அமலாக்கத் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மத்திய அமலாக்கத் துறையினர் நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திற்கு சென்று விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.