திக்குமுக்காட வைத்தது பல வலி, அரங்கு திறக்க வழி வகுத்தது தீபாவளி.. மகிழ்ச்சி வெளியிட்ட இயக்குனர்கள்..
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாமல் மூடிக்கிடந்தது. தியேட்டர்களை திறக்க அனுமதிக்கு மாறு திரை அரங்கு உரிமையாளர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று மாவட்ட கலெக்டர்கள், டாகடர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கினார். அதற்கு இயக்குனர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர். சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் தலைவர் - திரைப்பட இயக்குனர் டி. ராஜேந்தர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: திரையுலகை திக்குமுக்காட வைத்தது பல வலி, திரையரங்குகளை திறக்க வழி வகுத்தது தீபாவளி, திரையுலகினரின் வாழ்வில் தெய்வ அருளால் வீசட்டும் தீப ஒளி.
திரையரங்குகளை நவம்பர் 10ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன இயங்க அனுமதி வழங்கி திரைத்துறையினரின் வாழ்வில் ஓளி வீச வழி வகுத்து தமிழக திரையுலகிற்கு நம்பிக்கை ஒளி ஏற்றிய ஒளிவிளக்கு புரட்சித்தலைவர் வழி வந்த புரட்சித்தலைவி அம்மா அரசுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுக்கும், ஏனைய அனைத்து தமிழக அமைச்சர்களுக்கும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டைரக்டர் டி.ராஜேந்தர் கூறி உள்ளார்.
அதேபோல் எஜமான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள ஆர்.வி.உதயகுமார் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: கடந்த 7 மாதமாக கொரோனாவால் தமிழகம் பாதிக்கப்பட்டிருந்தது. மிக வேகமாக செயல்பட்டது தமிழக அரசு 95 சதவீதத்துக்கு மேல் கிட்டதட்ட மக்களை அரசு காப்பாற்றி இருக்கிறது. ஊடகங்கள் வாயிலாகவும், செல்போன் வாயிலாகவும் ஊடுருவிச் சென்று மக்களுக்கு நம்ம்பிகையை அரசு கொடுத்தது. 7 மாதத்துக்கு பிறகு தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் படம் ஓடும், படம் ஓடினால் படைப்பாளிகளின் கேமரா ஓடும், இது இரண்டும் ஓடினால்தான் சினிமாக்காரர்களின் வாழ்கை ஓடும். எங்களுடைய திரையுலகினர் வாழ்கை ஓடுவதற்காக கதவை திறந்து விட்ட தமிழக முதல்வருக்கும், மற்றும் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் திரையுலகின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஆர்.வி.உதயகுமார் கூறி உள்ளார்.