பலாத்காரம் செய்யப்பட்டால் மானமுள்ள பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் காங்கிரஸ் தலைவரின் பேச்சால் சர்ச்சை.
பலாத்காரம் செய்யப்பட்டால் மானமுள்ள பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என்று கேரள மாநில மகளிர் ஆணையம் அறிவித்துள்ளது. திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கேரளா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி காங்கிரஸ், பாஜக உள்பட கட்சியினர் மாநிலம் முழுவதும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேறி பெங்களூரு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து கொடியேறி பாலகிருஷ்ணனும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தால் கேரளாவில் ஆளும் இடது முன்னணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று நடந்த போராட்டத்தை கேரள காங்கிரஸ் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியது: கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மோசமான நடத்தை கொண்ட ஒரு பெண் கூறியதைக் கேட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் காங்கிரஸ் அரசுக்கு கடும் பிரச்சினைகளை ஏற்படுத்தினர். மோசமான நடத்தை கொண்ட அதே பெண்ணை பயன்படுத்தி மீண்டும் அரசியல் விளையாட்டுகளை முதல்வர் பினராயி விஜயன் தொடங்க நினைத்தால் அந்த கனவு மீண்டும் பலிக்காது. பலாத்காரத்திற்கு இரையானால் மானமுள்ள பெண்ணாக இருந்தால் தற்கொலை செய்து கொள்வார். அல்லது அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் அவர் பார்த்துக் கொள்வார்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பரபரப்பை ஏற்படுத்திய அந்தப் பெண், தன்னை பலர் பலாத்காரம் செய்ததாக ஊர் முழுவதும் தண்டோரா போட்டு அறிவித்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் பேசினார். காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனின் பேச்சுக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் மன்னிப்பும் கேட்டார். 'நான் யாரையும் புண்படுத்துவதற்காக இவ்வாறு பேசவில்லை. எனது பேச்சு யாரையாவது புண்படுத்தி இருந்தால் நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பின்னர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் கூறினார். கேரள மகளிர் ஆணைய தலைவி ஜோசபின் கூறுகையில், முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மன்னிப்பு கேட்டால் மட்டும் அவர் இந்தக் குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என்று கூறினார்.