கூண்டை உடைத்து தப்பிய புலி சிக்கியது மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் அருகே உள்ள திறந்தவெளி மிருகக்காட்சி சாலையில் கூண்டை உடைத்து தப்பிய பெண் புலி இன்று சிக்கியது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அந்த புலியை பிடித்து கூண்டில் அடைத்தனர். இதனால் 2 நாள் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சீயம்பம் கிராமத்தில் ஒரு புலி பொதுமக்களுக்கு கடும் பீதியை ஏற்படுத்தி வந்தது. ஊருக்குள் புகுந்து அந்த புலி, ஆடு, மாடுகள் உட்பட வளர்ப்பு பிராணிகளை அடித்துக் கொன்று வந்தது. இதையடுத்து அந்த புலியை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தனர். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் வனத்துறை அப்பகுதியில் ஒரு கூண்டை வைத்து. ஒருமுறை தப்பிய அந்த புலி 2வது முறை கூண்டில் சிக்கியது.

9 வயதான அந்த பெண் புலிக்கு காயங்கள் இருந்ததால் அதற்கு சிகிச்சை அளித்து மீண்டும் காட்டில் விட வனத்துறையினர் தீர்மானித்தனர். இதையடுத்து புலிக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருவனந்தபுரம் அருகே நெய்யாறில் உள்ள திறந்தவெளி மிருகக்காட்சி சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு கூண்டில் வைத்து அந்த புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இந்த புலி கூண்டின் மேல் பகுதியில் உள்ள கம்பியை வளைத்து தப்பிச் சென்றது. இது குறித்து அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று அந்த புலியை தேடினர். ஆனால் நேற்று இரவு நீண்ட நேரம் வரை தேடியும் அந்த புலி சிக்கவில்லை. இந்த திறந்தவெளி மிருகக்காட்சி சாலைக்கு ஒரு சில கிமீ தொலைவில் பொது மக்கள் வாழும் பகுதி உள்ளது.

அங்கு புலி சென்றால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் அதை எப்படியாவது பிடிக்க வனத்துறையினர் தீர்மானித்தனர். இதையடுத்து இன்று காலை மீண்டும் தேடுதல் வேட்டை நடந்தது. வயநாட்டில் இருந்து அதை பிடிப்பதற்காக வனத்துறை டாக்டர் ஒருவரும் வரவழைக்கப்பட்டார். கூடுதல் வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். இன்று காலை முதல் நடந்த தேடுதல் வேட்டையில் சுமார் 5 மணி நேரத்திற்குப் பின்னர் அந்த புலி இருக்கும் இடத்தை கண்டு பிடித்தனர். தொடர்ந்து துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தி அதை பிடித்தனர். இதன் பின்னர் அந்த புலி கூண்டில் அடைக்கப்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் நீடித்து வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

More News >>