பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த சினிமா தயாரிப்பாளர் போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக புகார்.
காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் ஆகிய படங்களை தயாரித்தவர் வருண்மணியன். இவர் சென்னை நந்தனத்தில் ரேடியன்ஸ் ரியாலிட்டி என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் மீது அயனம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 27-ம் தேதி கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த பிப்ரவரி மாதம் தையூரில் ரேடியன்ஸ் ரியாலிட்டி நிறுவனத்தின் கட்டுமானத்தில், இரண்டு பிளாட்டுகளை தலா ரூ. 2 லட்சம் கொடுத்து முன்பதிவு செய்திருந்தேன். பிளாட்டுகளுக்கான முழுத்தொகை கொடுக்காததால், தன்னிடம் தெரிவிக்காமல் வருண் மணியன் வேறொருவருக்கு விற்பனை செய்துவிட்டார். அதனால் முன் தொகையாக கொடுத்த ரூ. 4 லட்சம் பணத்தை திருப்பி கேட்டபோது. வருண் மணியன் கொரோனா காலம் என்பதால் திருப்பி தர கால தாமதமாகியதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் சில நாட்கள் கழித்து அவரது அலுவலகம் சென்று கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு வருண் மணியன் தன்னை மிரட்டியதாக வெங்கடேசன் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன், வருண் மணியனை தொலைபேசி மூலம் விசாரித்துள்ளார். அப்போது முறையாக பதிலளிக்காததால், அவர் வருண் மணியன் அலுவலகத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளார். ஆனால் அலுவலகத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்காதத்துடன் உதவி ஆணையரை தரக்குறைவாக நடத்தியுள்ளனர். வருண் மணியனை தொலைபேசியில் அழைத்து பேசும் போது ஆணையரை மிரட்டும் வகையில் பேசியிருக்கிறார்.
இதையடுத்து வருண் மணியன் மிரட்டிய செல்போன் ஆடியோ பதிவை அடிப்படையாக கொண்டு, கிண்டி காவல் நிலையத்தில் உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். இதனையறிந்த வருண் மணியன் காவல் நிலையம் வந்து, மிரட்டும் வகையிலும் தகாத முறையில் நடந்து கொண்டாராம். இதனைத் தொடர்ந்து ஏற்கனவே வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் மட்டும் 406- நம்பிக்கை மோசடி, 420- பண மோசடி, 506(1) மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக வருண் மணியன் தரப்பில் , இரண்டு பிளாட்டுகளுக்கு முன் தொகை அளித்த வெங்கடேசன், திடீரென பிளாட்டுகள் வேண்டாம் என ரத்து செய்துவிட்டார்.
இதனால் வேறொருவருக்கு பிளாட்டுகள் விற்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் கொடுத்த பணத்தை திருப்பி தர 3 மாதம் அவகாசம் உள்ளது . அதன்படி நவம்பர் 15-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. எனவே வெங்கடேசன் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த 2017 -ம் ஆண்டு ஒரு நடிகரை தாக்கியதாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வருண் மணியன் மீது புகார் அளிக்கப்பட்டு திரும்பப்பெறப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த வருண் மணியன் பிரபல நடிகை ஒருவரை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் ஏதோ காரணங்களால் ரத்தானதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த நடிகை திரிஷா...