ராகுல்காந்தி வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி வழக்கு தொடர்ந்த சோலார் சரிதாவுக்கு 1 லட்சம் அபராதம்...!
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கைத் தொடர்ந்த சோலார் புகழ் சரிதா நாயருக்கு 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.கேரளாவில் சரிதா நாயர் என்ற பெயரைக் கேட்டாலே காங்கிரசார் அலறுவார்கள். அதற்குக் காரணமும் உண்டு.இவரைப் பயன்படுத்தித் தான் உம்மன் சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியை கம்யூனிஸ்ட் கட்சியினர் சின்னா பின்னமாக்கினார்கள்.
குறைந்த விலையில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் சோலார் பேனல் அமைத்துத் தருவதாகக் கூறி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் இவர் பணம் பறித்ததாகப் புகார் கூறப்பட்டது. இவரது இந்த மோசடிக்கு அப்போதைய உம்மன்சாண்டி மந்திரிசபையில் இருந்த பல அமைச்சர்கள் உடந்தையாக இருந்ததாகப் புகார் கூறப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் அப்போது முதல்வராக இருந்த உம்மன்சாண்டி, சில அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்படப் பல ஆளுங்கட்சி பிரமுகர்கள் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் இவர் பரபரப்பு குற்றம் சுமத்தினார். இதையடுத்து முதல்வர் உம்மன்சாண்டி பதவி விலகக் கோரி அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சரிதா நாயரின் தில்லுமுல்லு காரணமாகத் தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்தது.சரிதா நாயர் கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் நாகர்கோவில், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் காற்றாலை அமைத்துத் தருவதாகவும், சோலார் பேனல் அமைத்துத் தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக இவருக்கு எதிராகக் கோவை, சேலம், நாகர்கோவில் ஆகிய இடங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன இதற்கிடையே கேரளாவில் இவர் மீது தொடரப்பட்ட வழக்கில் 3 வருடம் சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இன்னொரு வழக்கில் 40 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வருடம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இவர் ராகுல் காந்திக்கு எதிராகப் போட்டியிடத் தீர்மானித்தார். தன்னை காங்கிரஸ் கட்சியினர் பழிவாங்கியதால் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இதையடுத்து கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும், அமேதி தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் வயநாடு தொகுதியில் இவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அமேதி தொகுதியில் இவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குற்ற வழக்கில் இரண்டு வருடங்களுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றிருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால் தான் அவரது வேட்பு மனு வயநாட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் ராகுல்காந்தியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சரிதா நாயர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அப்போது, தன்னுடைய தண்டனையை மேல் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதாகவும், இதனால் தான் அமைதி தொகுதியில் தன்னுடைய வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும், வயநாட்டில் தன்னுடைய வேட்புமனுவை ஏற்றுக் கொள்ளாததால் ராகுல்காந்தியின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த சமயங்களில் சரிதா நாயர் மற்றும் அவரது வக்கீல் யாரும் ஆஜராகவில்லை. இன்று இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, பலமுறை விசாரணைக்கு ஆஜராகாததால் மனுவைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். மேலும் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததற்கு சரிதா நாயருக்கு ₹1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.