இயக்குனர் ராஜமவுலியை தாக்குவேன்.. பாஜக தலைவர் மிரட்டல்..
தெலுங்கானா மாநிலத்தில் துபாகா தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, பாஜகவின் தெலுங்கானா தலைவர் பண்டி சஞ்சய், பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியைத் தாக்குவேன் என மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் படம் ஆர் ஆர் ஆர். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜூனியர் என் டி ஆர் முஸ்லீம் உடையில் கோமராம் பீம் தோன்றும் காட்சி இடம் பெற்றது. இதற்கு பா ஜ கவினரும் ஆதி வாசிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம் மன்னர்களுக்கு எதிராக இருந்தவர் கோமராம் பீம் அவரையே முஸ்லிமாக காட்டுவதை ஏற்க முடியாது. உடனடியாக அக்காட்சியை டீஸரிலிருந்து நீக்க வேண்டும் என்று இயக்குனர் ராஜமவுலிக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
தற்போது ராஜமவுலியை உடல் ரீதியான தாக்குதல்கள் நடத்துவோம் எனப் பண்டி சஞ்சய் அச்சுறுத்தியுள்ளார். இந்த மிரட்டலுக்குத் தெலுங்கு திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பண்டி சஞ்சயின் மோசமான மொழியையும் வன்முறைத் தொணியையும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். பொதுக் கூட்டங்களில் கைதட்டல் பெறுவதற்காகப் பண்டி பொது இடத்தில் இப்படி பேசுவதை ஏற்க முடியாது. இதுபோல் பேசுவதற்கு பதிலாக முதலில் ராஜமவுலியுடன் தனிப்பட்ட முறையில் டீஸர் குறித்துப் பேச வேண்டும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
காட்சியைப் பார்க்காமலும், அதன் சூழலைப் பார்க்காமலும் யாராவது எப்படி திரைப்படத் தயாரிப்பாளர்களை காட்சிகளைத் துண்டிக்க சொல்வார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் ராஜமவுலியும் அவரது படக் குழுவினரும் இந்த விவகாரம் தொடர்பாக அமைதியாக இருந்து 'ஆர்.ஆர்.ஆர்' முடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.இதற்கிடையில் ஆர் ஆர் ஆர் படத்தில் நடிப்பதற்கு அலியா பட் ஐதராபாத் வருகிறார். அவருக்குப் பாதுகாப்புக்குத் தனி ஏற்பாடுகளைப் படக்குழு செய்துள்ளது.