கேரளாவில் 10, 12ம் மாணவர்களுக்கு நவம்பர் 15ம் தேதிக்கு பின்னர் வகுப்புகளை தொடங்க ஆலோசனை
கேரளாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் 15ம் தேதிக்கு பின்னர் பள்ளிகளைத் திறப்பது குறித்து கேரள அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.லாக்டவுன் நிபந்தனைகளில் கட்டம் கட்டமாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஏற்கனவே சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு மையங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் உட்படத் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 15ம் தேதிக்குப் பின்னர் நிபந்தனைகளுடன் பள்ளிகளையும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி உத்தரப்பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மட்டும் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. மற்ற மாநிலங்கள் பள்ளிகளைத் திறப்பதில் அதிகமாக ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் நவம்பர் 15ம் தேதி முதல் 10 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால் வகுப்புகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசுக்குப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பள்ளிகள் திறப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. முதல்கட்டமாக 10 மற்றும் 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அரசு உத்தரவிட்டால் இம்மாதம் 15ம் தேதிக்குப் பின்னர் பள்ளிகளைத் திறக்க தயாராக இருப்பதாகக் கேரள கல்வித்துறையும் அரசிடம் தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட்டால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு முறைகளைப் பின்பற்றி ஷிப்ட் முறையில் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனக் கருதப்படுகிறது. கேரளாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஜூன் 1ம்தேதி தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.