மத்திய விசாரணை அமைப்புகள் கேரள வளர்ச்சித் திட்டங்களை சீர்குலைக்க முயற்சி பினராயி விஜயன் கடும் தாக்கு.
திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் என்று வெளியானதோ அன்று முதல் கேரள அரசுக்கு கெட்ட காலம் தொடங்கி விட்டது என்றே கூறவேண்டும். கடந்த ஜூலை முதல் வாரத்தில் தான் திருவனந்தபுரத்திலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட தகவல் வெளியுலகத்திற்கு தெரியவந்தது. அப்போது அந்த சம்பவத்தை அனைவரும் ஒரு சாதாரண கடத்தலாகவே கருதினர். ஏனென்றால் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய சர்வதேச விமானங்கள் வழியாக அடிக்கடி தங்கம் கடத்தப்படுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்தது தான் அதற்கு காரணமாகும். ஆனால் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்படுவது அதுவே முதல் முறை என்பதால் அதன் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் ஐஏஎஸ் அதிகாரி உள்பட ஒரு பெரிய சதி கும்பலே ஈடுபட்டிருப்பது பின்னர் தான் தெரியவந்தது.
இதனால் உள்ளூர் போலீசார் விசாரித்தால் நன்றாக இருக்காது எனக்கருதி மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதுவே தனக்கு பெரும் பிரச்சினையாகும் என்று அப்போது முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரிந்திருக்கவில்லை. முதலில் சுங்க இலாகாவும், அதன் பின்னர் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவும், அதைத் தொடர்ந்து மத்திய அமலாக்கத் துறையும் விசாரணையை தீவிரப்படுத்தின. இந்த விசாரணையில் தான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியான சிவசங்கருக்கு இந்த தங்க கடத்தலில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலுக்கு எதிராகவும் புகார் கூறப்பட்டது. இது தவிர மேலும் அமைச்சருக்கும், முதல்வர் அலுவலகத்தில் உள்ள சிலருக்கும் தங்க கடத்தலில் தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. தங்கக் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கேரள அரசின் சில திட்டங்களிலும் கமிஷன் வாங்கியிருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த தீர்மானித்தது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று நிருபர்களிடம் கூறியது: தங்க கடத்தல் விவகாரம் குறித்து முதலில் மத்திய புலனாய்வு அமைப்பினர் நல்ல முறையில் தான் விசாரணை நடத்தினர். ஆனால் தற்போது கேரள அரசின் சில திட்டங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கின்றனர்.
கேரள அரசின் திட்டங்களை சீர்குலைப்பதற்காகவே இவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும். விசாரணை என்பது மிகவும் ரகசியமாக நடத்த வேண்டியதாகும். ஆனால் விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறி சிலர் தேவையில்லாமல் கேரள அரசை குற்றம் சாட்டும் வகையில் பேசி வருகின்றனர். இது ஏற்கத்தக்கதல்ல. கேரள அரசின் புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.