புதுச்சேரி கைதிகளுக்கு செல்போன் சப்ளை -ஜெயில் அதிகாரி ஹாட்ரிக் சஸ்பெண்ட்
புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு மத்தியச் சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இப்படி சிறைக்குள் இருக்கும் கைதிகளில் பிரபல ரவுடிகள் சிலர் செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாமூல் வசூல் செய்வதாகப் புகார் வந்தது. ஜெயிலில் இருக்கும் கைதிகள் எப்படி செல்போனில் விரட்ட முடியும் என்ற கேள்வி எழுந்ததால் போலீசார் இதுபற்றி துவக்கத்தில் கண்டுகொள்ளவில்லை. ஆனால் புகார்கள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் இருந்ததால் விசாரணையில் இறங்கினர்.
இதைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார், கடந்த 20-ந்தேதி மத்தியச் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கைதிகளிடம் இருந்து 12 செல்போன்கள், பேட்டரிகள், சாஜர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக காலாபட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஜெயில் உதவி சூப்பிரண்ட் ஆனந்த்ராஜ் என்பவர்தான் கைதிகளுக்கு செல்போன் சப்ளை செய்துள்ளது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இது குறித்த அறிக்கை ஒன்றை காவல்துறையினர் சிறைத் துறைக்கு அனுப்பி வைத்தனர் இதைத் தொடர்ந்து சிறைத்துறை ஐஜி பங்கஜ்குமார் ஷா ஆனந்த்ராஜை சஸ்பெண்ட் செய்து, உத்தரவிட்டார்.
ஆனந்த்ராஜ் ஏற்கனவே இதேபோன்ற புகார்களால் இரண்டு முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். தற்போது மூன்றாவது முறையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு ஹாட்ரிக் அடித்துள்ளார்.