ராஜ்யசபா தேர்தலில் பாஜகவின் 9 பேர் வெற்றி.. சபையில் பலம் 92 ஆக உயர்வு..

பாஜக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இதையடுத்து, ராஜ்யசபாவில் பாஜகவின் எண்ணிக்கை 92 ஆனது.உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. அங்கு காலியாக உள்ள 10 ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான தேர்தல், நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. பாஜகவுக்கு 304 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால், அந்த கட்சிக்கு எளிதாக 8 எம்.பி.க்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதனால், 8 பேரை நிறுத்தியது. சமாஜ்வாடிக்கு 48 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் அந்த கட்சி சார்பில் ராம்கோபால் யாதவ் நிறுத்தப்பட்டார். பகுஜன்சமாஜ் கட்சிக்கு 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அக்கட்சி ஒருவரை நிறுத்தி, அதற்குப் போட்டியாக யாரும் இல்லாவிட்டால், எளிதாகத் தேர்வாகி விடலாம். அதனால், பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் ராம்ஜி கவுதம் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், திடீரென வாரணாசியைச் சேர்ந்த வக்கீல் பிரகாஷ் பஜாஜ் என்பவர், சமாஜ்வாடி ஆதரவுடன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையே, ராம்ஜி கவுதமுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பகுஜன் சமாஜ் கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தனர். இதைத் தொடர்ந்து அவர்களைக் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி உத்தரவிட்டார். அதன்பின், பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி இடையே மறைமுகமாகச் சமரசம் ஏற்பட்டு, வக்கீல் பிரகாஷ் பஜாஜ் வாபஸ் பெற்றார். இதையடுத்து, உ.பி.யில் போட்டியிட்ட பாஜகவின் 8 பேரும், சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ் தலா ஒருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று(நவ.2) அறிவிக்கப்பட்டனர்.

உ.பி.யில் இருந்து தற்போது பாஜகவுக்கு மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் புரி, நீரஜ் சேகர், அருண்சிங், கீதா சாக்கியா, ஹரித்வார் துபே, பிரிஜ்லால், பி.எல்.வர்மா, சீமா திவேதி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். மேலும், உத்தர காண்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட நரேஷ் பன்சால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. எனினும் மொத்தம் உள்ள 243 உறுப்பினர்களில் 123 உறுப்பினர்கள் கிடைத்தால்தான் தனிமெஜாரிட்டி கிடைக்கும். 92 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளது. தற்போது காங்கிரசுக்கு ராஜ்யசபாவில் 39 உறுப்பினர்களும், லோக்சபாவில் 51 உறுப்பினர்களுமே உள்ளனர்.

More News >>